Published Date: January 22, 2025
CATEGORY: EVENTS & CONFERENCES

தமிழ் மொழி 4000 ஆண்டுகள் பழமையானது என்பதை நிரூபிக்க அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்ட வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி ஆவணக் காப்பகம் மற்றும் பாரம்பரிய மையம் சார்பில் 'தெற்கு ஆசியா' மற்றும் நிறுவனங்களுக்கான வரலாற்று இணைப்புகள் என்னும் தலைப்பிலான கண்காட்சியை தொடங்கி வைத்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது:
பாரம்பரியமிக்க கல்வி நிறுவனங்கள் நாட்டின் கலாச்சார அடையாளமாக விளங்குகின்றன. ஒவ்வொரு சமுதாயமும், தனக்கான வரலாற்று ஆவணங்களை பதிவு செய்வது அவசியம்.ஐரோப்பிய நாடுகள் பல நூற்றாண்டுகளாக தனக்கான சிறந்த வரலாற்று ஆவணங்களைப் பதிவு செய்துள்ளன.
ஆதாரங்கள் தேவை : அதே நேரத்தில் தமிழ் சமுதாயம் இலக்கியத்தில் சிறந்து விளங்கினாலும் வரலாற்று ஆவணங்களைக் குறைவாக கொண்டுள்ளது. இலக்கியங்களின் தமிழ்மொழி 4000 ஆண்டுகளுக்கு முந்தையது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. வரலாற்றை அதிகாரப்பூர்வமாக கண்டறிவதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.
தற்போது கீழடியில் ஒவ்வொரு அடுக்கு தோண்டும்போதும், 100 முதல் 200 ஆண்டுகள் இடைவெளியில் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் அங்கு வசித்த மக்களின் வரலாறு தெரியவருகிறது என்றார் அவர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பொதுமக்கள் அடுத்த இரு மாதங்களுக்கு காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அமெரிக்க எம் ஐ.டி கல்வி நிறுவனம் (தெற்கு) தலைவர் ரேணு போபண்ணா, பொறியியல் துறை தலைவர் ஹம்சா பாலகிருஷ்ணன், சென்னை ஐஐடி உலகளாவிய ஈடுபாடு துறைத் தலைவர் ரகுநாதன் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Media: Dinamani