Published Date: December 2, 2021
CATEGORY: CONSTITUENCY
நகை பயிர்க் கடன் வழங்கியதில் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமை வகித்தார். ரூ81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கூடுதல் தொழிலாளர் ஆணையர் தி. குமரன், தொழிலாளர் இணை ஆணையர் பெ. சுப்பிரமணியன், தொழிலாளர் உதவி ஆணையர் சீ.மைவிழிச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் மதுரையில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 100 பேருக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, ரூபாய் 5,47,817 மதிப்பில் மோட்டார் வாகனங்கள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
பின்னர் அவர் பேசும்போது ,முதியோர் உதவித்தொகை திட்டத்தில் தகுதியானவர்களுக்கு நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நகை, பயிர் கடன் வழங்கியதில் ரூ1000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்று இருப்பதை கண்டறிந்துள்ளோம். அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.
மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ,பூமிநாதன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்."
Media: Hindu Tamil